Type Here to Get Search Results !

வாழ்வாதாரத்தை உயர்த்த வாழைநார் பயிற்சி நெறி

 வாழ்வாதாரத்தை உயர்த்த வாழைநார் பயிற்சி நெறி



வாழை செய்வோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் வாழைநார் பயிற்சியை முன்னெடுத்துள்ளது நீர்வேலி வாழைக்குலைச் சங்கம்.

இதன் மூலம் பல பெண் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியுமென நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றார்  சங்கத்தின் தலைவர் விக்கினேஸ்வரன்.

வாழை உற்பத்தி தென்னிலங்கை வியாபாரிகளின் வாழைக்குலை கொள்வனவு மற்றும் தமது சங்கத்தால் முன்னெடுக்கப்படும் வாழை நார் பயிற்சி நெறி தொடர்பாக “தினச்செய்திக்கு” வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கூறியவை வருமாறு-


கேள்வி: நீர்வேலியில் வாழைக்குலைச் சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது. அதன் செயற்பாடு பற்றிக் கூறமுடியுமா?

பதில்: 1948 ஆம் ஆண்டு எமது சங்கம் ஆரம்பிக்கப்பட்டது பின்னர்  1951 ஆம் ஆண்டு சட்ட ரீதியாக பதிவுசெய்யப்பட்டு இயங்கிவருகின்றது.

ஆரம்ப காலங்களில் நாம் வாழைத்தோட்டங்களுக்குச் சென்றே வாழைக்குலைகளைப் பெற்றுவந்தோம்.

எமது பகுதியில் யுத்தம் நடை பெற்றுவந்த காலப்பகுதியான 1988 -1990வரையான காலப்பகுதியில் சங்கம் செயற்படாமல் இருந்தது. பின்னர் 1999முதல் மீண்டும் சங்கம் ஆரம்பித்து செயற்பட்டுவருகின்றது.

இப்பொழுது நாம் இந்த சங்கத்தை சந்தை வடிவத்திலேயே நடாத்தி வருகின்றோம். இங்கு தோட்டக்காரர்கள் வாழைக்குலைகளை கொண்டுவந்து தருவார்கள். நாம் அதனைப் பெற்று எம்மிடம் வரும் வெளிவியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றோம்.


மேலும் எமது சங்கத்திற்கான பதிவு ஆரம்பத்தில் வலிகாமம் கிழக்கு என்றுதான் இருந்தது. அதனால் எமது ஊர்களில் மட்டு மல்ல எல்லா ஊர்களில் இருந்தும் வாழைக்குலைகளை கொண்டு வருவார்களிடம் கொள்வனவு செய்து விற்பனை செய்து வருகின்றோம்.


கேள்வி: இப்பொழுது நீங்கள் செய்யும் வாழையில் என்னென்ன இனங்கள் உள்ளன?

பதில் : கதலி, கப்பல், இதரை, மொந்தன் ஆகியன. இதில் அதிகமாக கதலி, இதரைதான் செய்வார்கள். கப்பல் இனமும் செய்வார்கள். அது நோய்க்கு பெருமளவில் அழிவதால் அந்த இனம் செய்வது மிகவும் குறைவாகவே உள்ளது.


கேள்வி: வாழைகளில் பல்வேறு இனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதனால் அவ்வாறான இனங்களை உங்களது பிரதேசங்களில் வைத்துள்ளீர்களா? இந்த புதிய இனங்களினால் நீங்கள் வழமையாக வைக்கும் வாழைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

பதில்: இல்லை. இதனால் எந்த தாக்கமும் எமக்கு இல்லை. முன்னர்; “கவன்தீஸ்” என்றொரு வாழை இனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அது எமது சந்தையில் விற்பனையாவதில்லை.


இந்த “கவன்தீஸ்” இனத்தை செய்வதனால் ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே இந்த வாழை இனத்தை நீங்கள் நடலாம் என்றார்கள். எனினும் இந்த இனத்தை நட்டு வளர்த்து முடிய அதனை கைவிட்டுவிட்டார்கள். ஆனால் ஆய்வின்போது எமது பகுதியில் வைக்கப்பட்ட “கவன்தீஸ்” வாழையின் குலைகளை பொதி செய்யும்போது அது கறுத்து பாவனைக்கு உதவாமல் போய்விடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனால் ஏற்றுமதி செய்யமுடியாமல் போய்விட்டது. எமது மக்களும் அந்த இன வாழையை அழித்து விட்டுதாம் வழமையாக வைக்கும் வாழையையே வைத்து வருகின்றனர்.

இந்த “கவன்தீஸ்” பழம் பார்வைக்கு அழகானதாக இருக்கும். இது இனிப்பு குறைவு. சலரோக நோயாளிகளுக்கு சிறந்தது. ஆனால் எமது மக்கள் அதனை விரும்பி உண்ணுவதில்லை.


அதுமட்டுமன்றி எமது மக்கள் பழைய முறையில்தான் இருக்கிறார்கள். நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் “கவன்தீஸ்” வாழைப்பழம் விற்பனையாகாமல் இருந்ததனால் அதனைக் கைவிட்டுவிட்டோம்.


கேள்வி: தற்போது மழை காலமாகையால் முன்னரைவிட வாழைப்பழங்களின் விலைகள் எந்த நிலையிலுள்ளன? அதனால் உங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளனவா?

பதில்: மாரி காலத்திற்கு முன்னர் விலை அதிகரித்திருந்த நிலையில் தற்போது வாழைப்பழங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடந்த காலத்தை விட இந்த வருடம் வாழைப்பழங்களின் விலை குறைந்துள்ளன. ஏனெனில் தென்னிலங்கையில் உள்ள வாழைகள் மழையால் சேதமடையாததால் எமது பழங்களுக்கான கேள்விகள் தென்னிலங்கையில் குறைந்துள்ளன.

அது மட்டுமன்றி இம்முறை எமது ஏற்றுமதி வவுனியாவுடனேயே நின்று விட்டது. அங்கும் விலைகள் குறைவாகவே உள்ளன.

மேலும் எமது சங்கம் இருந்த காலப்பகுதியில் வாழைக்குலை செய்கையாளர்கள்  தமது வாழைக்குலைகளை விற்பதற்கு  பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். ஆனால் அந்த நிலை தற்போது எவருக்கும் இல்லை.


கேள்வி: வாழைக்குலைகளை எவ்வாறு பெற்றுக்கொள்கிறீர்கள்?

பதில் : வாழைக்குலை செய்கையாளர்கள் கொண்டுவரும் குலைகளை நிறுத்து எமது சங்கத்தில் தீர்மானிக்கப்படும் விலைகளின்படி கிலோவுக்கான விலைகளைப்பேசி பெற்றுக்கொள்வோம்.


கேள்வி: தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகள் தோட்டங்களுக்கே சென்று நேரடியாக வாழைக்குலைகளை கொள்வனவு செய்வதாக கூறப்படுகின்றது. இதனால் உங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படுகின்றதா?

பதில்: எமக்கு பாதிப்பு என்று கூறமுடியாது. ஏனெனில் சில வியாபாரிகள் தோட்டங்களுக்கு நேரடியாகச் சென்று வாழைக்குலைகளை கொள்வனவு செய்வதற்கு காரணம் வாழைக்குலைகளில் சேதம் குறைவாக காணப்படும் என்பதால்தான். எம்மிடம் கொண்டுவரப்படும்  குலைகளை தோட்டங்களில் இருந்து கட்டி ஏற்றி வந்து பின்னர் இங்கு வந்து நிறுத்துத்தான் நாம் பெற்றுக்கொள்கிறோம். அதன் பின்னர் வியாபாரிகளிடம் கொடுக்கும் போதும் நாம் நிறுத்துத்தான் ஏற்றுகின்றோம்.


இதனால் குலைகளில் உள்ள காய்களுக்கான சேதங்கள் அதிகரிக்கின்றன. இதனாலேயே அவர்கள் அங்கு சென்று பெற்றுக்கொள்கின்றார்கள். அதனால் எமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.


அதுமட்டுமன்றி அவர்களை நாம் கட்டுப்படுத்தவும் இல்லை. ஏனெனில் தோட்டக்காரர்களிடம் பெற்றுக்கொள்ளும் வாழைக்குலைகள் முழுவதனையும் எம்மால் விற்பனை செய்வது கடினம். அதனால் நாமும் விட்டுவிட்டோம்.


ஆனால் முன்னர் சங்கம் பதிவு செய்யப்பட்ட காலத்தில் சங்கத்தின் அங்கத்தவர்கள் எவரும் வெளி வியாபாரிகளிடம் குலைகளை விற்பனை செய்யமுடியாது. அவ்வாறு விற்பனை செய்தால் குலையின் விலை மலியும்போது சங்கம் பொறுப்பெடுத்து குலைகளை வெட்டாது. அதற்கு காரணம் குலைகளை சந்தைப்படுத்தல் திணைக்களத்திடம் நேரடியாக விற்கலாம் என்பதால்.

ஆனால் இப்பொழுது எவருமே இல்லை. நாம் வெளி வியாபாரிகளைப் பிடித்தே விற்று வருகின்றோம். இதனால் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் ஏற்படும். சங்கத்தின் கட்டளை கடன் கொடுக்கக்கூடாது என்பதே. கடன் கொடுப்பவர்கள் தாமாகவே கடனைக் கொடுத்து பெற்றுக்கொள்ளவேண்டும். இதற்கு சங்கம் பொறுப்பெடுத்துக் கொள்ளாது. இப்படியான நிலைமையிலேயே இந்தச் சங்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி நாம் எவ்வளவோ முயற்சிகள் எடுத்துள்ளோம். ஒரு நிறுவனத்தின் ஊடாக இந்த வாழைக்குலைகளை விற்பனை செய்வதற்கு. அது முடியாமல் உள்ளது. ஒரு நிறுவனம் பொறுப்பெடுத்தால் அவர்கள் மூலம் எமது வாழைக்குலைகளை விற்பனை செய்யமுடியும். இதனால் எமது சங்கமும் மக்களும் வளர்ச்சி பெற முடியும் என்பது எமது எதிர்பார்ப்பாக உள்ளது.


கேள்வி: நீங்கள் தென்னிலங்கை வியாபாரிகளை தோட்டங்களில் கொள்வனவு செய்ய விட்டுள்ளீர்கள். இதனால் எதிர்காலத்தில் உங்களது சங்கத்திற்கு வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதா?

பதில்: பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. ஏனெனில் தோட்டத்திற்கு தென்னிலங்கை வியாபாரிகள் சென்றால் அவர்கள் எம்முடன் தொலை பேசியில் பேசி விலைகளைக் கேட்டறிந்த பின்னரே விற்பனை செய்வார்கள். ஏனெனில் வாழைக்குலைகளின் விலைகளை நாம்தான் நிர்ணயிப்பது. அதனால் எமக்கு யார் வந்து பெற்றுக் கொள்கின்றார்கள் என்ன விலையில் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பது தெரியும். நாம் குறிப்பிடும் விலையிலிருந்து ஒரு ரூபா, இர ண்டு ரூபா குறைத்தே அவர்கள் கொடுப்பார்கள்.

அவ்வாறு இல்லை என்றால் நாம் நாளை சங்கத்தில் விற்போம் எனத் தெரிவிப்பார்கள். இதனால் தோட்டக்காரரும் சாி, சங்கமும் சரி இன்றுவரை பாதிப்பை எதிர் கொள்ளவில்லை. இனியூம் அவ்வாறான நிலைவராது என்று எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: உங்களது வாழைக்குலைகளை தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்வது குறித்து குறிப்பிட முடியுமா?

பதில்: கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாங்களாக கொண்டு சென்று விற்பனை செய்தோம். அது எமக்கு இலாபத்தை தரவில்லை. காரணம் அங்கு கொண்டு சென்று விற்கும் போது கடனுக்கு கொடுக்கவேண்டிய தேவை இருந்தது. இதனால் எமக்கு சில வியாபாரிகளிடமிருந்து பணம் கிடைக்க வில்லை. இது எமக்கு சரிப்படாத தால் அதனைக் கைவிட்டுவிட்டோம்.


இப்போது எமது சங்கத்தில் வைத்து தென்னிலங்கை வியாபாரிகள் வரும்போது வாழைக் குலைகளை விற்று பணத்தை பெற்றுக்கொள்கின்றோம்.


திரு கோணமலை மாவட்டத்திலிருந்தே அதிகமான வியாபாரிகள் வந்து வாழைக் குலைகளை கொள்வனவு செய்து கொண்டு செல்கின்றார்கள்.

மேலும் கடந்த வருடம் கார்கீல்ஸ் பூட்சிற்றி எம்மிடமிருந்து வாழைக் குலைகளை கொள்வனவு செய்து வந்தது. இரண்டு நாட்களுக் கொருமுறை 1000, 1500 கிலோவென வழங்கி வந்தோம். இதனால் விலை குறையவிடாது வைத்திருந்தோம்.

ஆனால் தற்போது வாழைக்குலைகளை தனிநபர்களிடம் பெற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் எம்மிடமிருந்து பெற்றுக் கொள்வதாக எந்தவொரு உத்தரவாதத்தையும் அவர்கள் தரவில்லை. இதற்கு காரணம் இடையில் உள்ள தரகர்களே. அவர்கள் தமக்கான தரகுப் பணம் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக சங்கத்தில் பெற்றுக் கொள்ளாது தனி வியாபாரிகள் மூலம் பெற்றுக்கொடுத்து வருகின்றார்கள்.


கேள்வி: சங்கத்தில் அங்கத்தவர்களாக உள்ளவர்களுக்கு நீங்கள் ஏதா வது உதவிகளைச் செய்து வரு கின்றீர்களா? அவர்களது வரு மானம் போதுமானதாக உள்ளதா?

பதில் : நாம் எந்தவொரு உதவியையும் செய்வதில்லை. இங்குள்ளவர்கள் தனியொரு விவசாயம் செய்வதில்லை. பலதையும் செய்கின்றார்கள்.


அதுமட்டுமன்றி இங்கு வாழையைப் பொறுத்தளவில் எந்தக்  காலப்பகுதியிலும்  வாழைப்பழங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதனால் அவர்களுக்கு வருமானத்தில் பாதிப்பு என்பது கிடையாது. அவர்கள் எந்த நேரமும் வாழைக்குலைகள் வெட்டக்கூடியதாகவே இருக்கும். அது மட்டு மன்றி மழைகாலங்களில் 50 வாழை மரங்கள் முறிந்தால் மீதி இருக்கும் 5 மரங்களில் உள்ள குலைகளை இரட்டிப்பாக விற்று நட்டத்தை ஈடுகட்டிவிடுவார்கள்.


நீர்வேலியைப் பொறுத்தவரையில் இயற்கையாகவே வாழை மரங்கள் செய்கை பண்ணப்படுகின்றன. செயற்கை இரசாயனங்கள், உரங்கள் எதுவும் போடுவதில்லை. இதனால் நட்டம் ஏற்படுவது குறைவாகவே காணப்படுகின்றது.


கேள்வி: உங்களது சங்கத்தினால் வாழை நாரைப் பயன்படுத்தி கை வினைப் பொருட்கள் செய்து விற்கப்படுவதாகக் கூறப்படுகின்றதே அதுகுறித்து கூறுங்கள்?

பதில் : எமது பகுதியல் கழிவாகும் வாழைநாரைப் பயன்படுத்தி கை வினைப்பொருட்கள் செய்துவருகின்றோம். தற்பொழுது ஐந்து பெண் பிள்ளைகளை வைத்தே இந்த உற்பத்தியை செய்து வருகின்றோம்.

அண்மையில் பிரதேச செயலகத்தினால் இதுகுறித்த பயிற்சி வகுப்பு நடாத்தப்பட்டது. அதிலிருந்து 7,8 பெண்பிள்ளைகளை நாம் இணைத்துக் கொள்ளவுள்ளோம். வாழை செய்வோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலேயே இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இவ்வாறு வாழை நாரைப் பயன்படுத்தி பொருட்களை செய்யும் போது இதனை விலை மதித்து விற்பனை செய்யமுடியும் என்பதற்காகவே இதனை செய்து வருகின்றோம்.

அதுமட்டுமன்றி இந்த வடிவங்களை அமைப்பது தொடர்பாக தேசிய வடிவமைப்பு சபையே முதலில் பயிற்சிகளை வழங்கியது. விவசாயக்கல்லூரியில் இதற்கென 3 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அதன்பின்னர் GAZ தான் கட்டடம் அமைத்து தந்தது. கடந்த 3 வருடங்களாக இவற்றை செய்து வருகின்றோம். எனினும் நட்டத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையம்.


கேள்வி: இந்த பொருட்களின் விற்ப னையை அதிகரிக்க என்ன நட வடிக்கையை எடுத்துள்ளீர்கள்?

பதில்: விற்பனை முகவர் மூலம் இந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். தற்போது கொழும்பு வரை கொண்டுசென்றுள்ளோம். யாழ்ப்பாணத்திலும் கடைகள் பிடித்து கொடுத்து வருகின்றோம். கடந்தமாதம் 13000ரூபா இலாபம் கிடைத்தது. இந்த வருடமும் இலாபம் கிடைக்குமென எதிர்பார்க் கின்றோம்.

இப்பொழுது தான் வியாபாரம் ஆரம்பித்துள்ளது. இப்பொழுதுதான் தொண்டு நிறுவனங்களுக்கும் தெரியவந்துள்ளது. எனவே இதனை தொடர்ந்தும் செயற்படுத்த முடியும். எமக்கு ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. “பாக்” விற்பனை செய்வதற்கே கேள்வி அதிகமாக உள்ளது. ஆனால் இங்குள்ள ஒருவருக்கு மட்டுமே அதைச்செய்யத் தொிந்திருப்பதால் கேள்விக்கேற்ப வழங்க முடியாமல் உள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்தில் நடை பெறும் கண்காட்சிகளில் இந்தப் பொருட்களை காட்சிப்படுத்துவதற் காக பெருமளவில் அனுப்பி வைத்து வருகின்றோம்.

கேள்வி: நீர்வேலியில் வாழைக்குலை சங்கம் இருப்பது, இவ்வாறான பொருட்கள் செய்வது பற்றி யாழ். குடாநாட்டில் எவருக்கும் பெருமளவில் தொியாது என்றே கூற வேண்டும். இதனால் இந்தப் பொருட்களை எவ்வாறு அறிமுகப்படுத்தி வருகின்றீர்கள்?

பதில்: நியூகிளியர் பவூண்டேசன் நடாத்தும் எந்தக் கண்காட்சியாக இருந்தாலும் எம்மை அழைத்துச் செல்வார்கள்.

அது மட்டுமன்றி வாழ்வெழுச்சி குன்றியோர் சங்கத்திற்கு கொடுத்துள்ளோம். TCT இற்கு கொடுத்துள்ளோம். கோப்பாய் பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட சமுர்த்தி கண்காட்சியிலும் வைத்திருந்தோம். துரையப்பா விளையாட்டரங்கில் நடாத்தப்பட்டுவரும் கண் காட்சிகளிலும் காட்சிப்படுத்துகின்றோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad