Type Here to Get Search Results !

கட்டுரை - இலங்கை கல்வி முறைமையில் காணப்படும் சமகாலப் பிரச்சினைகள்

கல்வி என்பது ஒருவரின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தை குறித்து நிற்கிறது. இன்று நாட்டிலுள்ள கல்வி முறைகளை எடுத்து நோக்கும் போது ஆரம்ப கல்வி, இடை நிலை கல்வி, பல்கலைக்கழக கல்வி உள்ளடங்கிய உயர்கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில் நுட்ப கல்வி, வளர்ந்தோர் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர் கல்வி என பலவற்றை இனங்காணலாம். அவற்றுள் ஆரம்ப கல்வி, இடை நிலை கல்வி, உயர் கல்வி என்பன முறை சார்ந்த கல்வியின் பிரதான நிலைகளாகும்.



இன்று இலங்கையில் கிட்டத்தட்ட 9,800 அரசாங்க பாடசாலைகளில் 41 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இலங்கையில் வாழும் மாணவர்கள், தமது வாழ்விடத்திலிருந்து 5 கிலோ மீட்டருக்குள் பாடசாலைகள் அமைந்துள்ளன. மேலும் இவர்களுக்கு கற்பிக்க 2,35,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏறத்தாழ 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் மேலை நாடுகளில் காணப்படுகின்றது . வளர்முக நாடுகளின் கல்வி முறைகளோடு ஒப்பிடும் போது, இலங்கையின் கல்வி முறைமை பாராட்டத்தக்க முறையில் வளர்ச்சி பெற்றுள்ளது. மக்களின் பாடசாலை கல்வி மட்டம் அதாவது சராசரி இலங்கையரின் கல்வித் தகுதி 9 ஆம்தரம் (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாட்டு மக்களின் சராசரி கல்வித்தகுதி 5 ஆம் தரம்)
அரசாங்கப் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கடந்த 55 ஆண்டுகளாக இலவசக் கல்வியையே வழங்கி வருகின்றன. அத்துடன் இம் மாணவர்களுக்கான புலமை பரிசில் ஏற்பாடுகளும் உண்டு. (5 ஆம் வகுப்பு புலமைப் பரிசில், மஹாப்பொல புலமைப் பரிசில் என்பன)

இவை யாவும் இலங்கையின் கல்வி முறை பற்றிய சிறப்பம்சங்கள் ‘யாவருக்கும் கல்வி‘ என்ற சிந்தனை பிரகடனப்படுத்துவதற்கு முன்னரே இலங்கைக் கல்வி நிர்வாகிகள் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சிந்தித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆனால் இன்று இலங்கை கல்வியானது பல சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது. அவற்றில் சிலவற்றை கீழே நோக்குவோம்;

  • 1.  வேலையில்லாப் பிரச்சினை
  • 2.  அரசின் நிதி ஒதுக்கீட்டு பிரச்சினை
  • 3.  பாடசாலைக்கு மாணவர் வருகையில் ஒழுங்கின்மை
  • 4.  மாணவர்களின் கவனம் முழுக்க முழுக்க பரீட்சையை மையப்படுத்தி இருத்தல்
  • 5.  பாடசாலைகளுக்கு வளங்கள் ஒழுங்காக பகிர்ந்தளிக்கப்படாமை
  • 6.  வறுமை
  • 7.  கல்விக்கொள்கையில் கலைத் திட்டங்களில் அடிக்கடி ஏற்படும் மாற்றம்.
  • 8.  ஆங்கில மொழி புலமையின்மை.
  • 9.   மொழி பெயர்ப்புப் பிரச்சினை

இனி மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு பிரச்சினை தொடர்பாகவும் விரிவாக நோக்குவோம்.
      01. வேலையில்லாப் பிரச்சினை
தற்போது இலங்கையின் கல்வித்துறை சூனியத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் கல்வியானது அவ்வாறு இயங்க முடியாது. அது அரசியல், பொருளாதார, சமூக, கலாசார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இன்றைய கல்வி முறையில் அவதானிக்ககூடிய முக்கிய பிரச்சினையாக வேலையில்லாப் பிரச்சினை காணப்படுகிறது.
காரணம் படிப்பிற்கேற்ற தொழிலின்மை மற்றும் ஊதியம் இன்மை, படித்தவர்களை விட படிக்காதவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். எனவே அதிகமான பட்டதாரிகள் வேலையின்றி இருக்கின்றனர். காரணம் தொழில் உலகுக்கும் கல்வி உலகுக்கும் இடையில் உள்ள இணக்கமின்மை ஆகும். அதாவது கல்வியை தொழில்சார்மயப்படுத்துவதால் மட்டும் அவை பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் என கூற முடியாது. மாறாக தொழிற்சந்தைக்கு தேவையான உளச்சார்பு, ஆளுமைதிறன்கள், மற்றும் ஒழுக்கலாறு என்பவற்றை கொண்ட தொழிற்படையை உருவாக்குவதாக கல்வி அமைய வேண்டும்.

தனிநபரின் உள்ளார்ந்த ஆற்றலை வளர்த்தெடுப்பது கல்வியின் பணிகளில் ஒன்றாக இருப்பினும்,மக்களை தொழில் உலகுக்கு தயார்படுத்துவதும் கல்வியின் முக்கிய வகிபாகமாகும். இதை பூர்த்தி செய்வதில் நம் நாட்டு கல்விமுறையானது பல சவால்களுக்கு முகங்கொடுக்கிறது. இதனால் இன்று பாரிய வேலையில்லா பிரச்சினையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.இதனால் போராட்டங்களும் வன்முறைகளும் இடம்பெறுகிறது.

       02. அரசின் நிதி ஒதுக்கீட்டு பிரச்சினை
பெருமளவு நிதியை அரசாங்கம் கல்விக்கு ஒதுக்கி வருகின்றது. இது சுதந்திர காலம் முதல் செய்யப்பட்டு வரும் உதவி, அண்மைக்காலங்களில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, போருக்கான ஆயத்துக்கு ஒதுக்கப்பட்ட பெரிய அளவிலான நிதி என்பன கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் பல வீழ்ச்சிக்கான காரணமாக உள்ளன.


இது மிக முக்கியமான பிரச்சினையாகும். இலங்கையில் தேசிய வருமானம், அரசாங்க செலவு என்பவற்றுடன் கல்விச் செலவை ஒப்பிட்டுக் காணும் விகிதாசாரமும் 1998 முதல் குறைந்து சென்றுள்ளது. தேசிய வருமானத்தின் விகிதாசாரமாக கல்விச் செலவு 1998 ல் 3.1 ஆக இருந்து 2002 ல் 2.9 வீதமாக குறைந்தது. இதே காலப்பகுதியில் அரசாங்கச் செலவின் விகிதாசாரமாக கல்விச் செலவு 8.4 சதவீதத்திலிருந்து 6.8 ஆக குறைந்துள்ளது.


இன்று மிகவும் கஷ்டங்களின் மத்தயில் வருடத்திற்கு 4000 கோடி கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அரசாங்கமும் வெளிநாட்டு உதவியும் இணைந்து பணத்தை கல்வியில் எந்நிலைக்கு முக்கியமாக செலவழிக்க வேண்டும் என்ற வினா எழுகிறது. எனவே .இது ஒரு முக்கியமான சமகால பிரச்சினையாக காணப்படுகிறது.

 03. பாடசாலைக்கு மாணவர் வருகையில் ஒழுங்கின்மை
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெற்றோரின் கல்வி நிலைமை அதாவது கல்வியில் பின் தங்கியிருத்தல் மற்றும் பிள்ளைகளின் கல்வியில் அதிகம் கவனம் செலுத்தாமை,பிள்ளைகள் பாடசாலைகளுக்கு தவறாமல் செல்வதற்கான ஒத்துழைப்பு பெற்றோரினால் சரிவர வழங்கப்படாமை.
அது மாத்திரமின்றி பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாட்டில் இருத்தல், அதிலும் குறிப்பாக தாய்மார் வீட்டுப்பணிப் பெண்களாக வேலைக்கு செல்லுதல், இதனால் பிள்ளைகள் கவனிப்பார் அற்று வளர்தல், போன்ற இன்னோரன்ன காரணங்களினால் பிள்ளைகளின் பாடசாலை வருகை ஒழுங்கின்றி காணப்படுகிறது.

  04. மாணவர்களின் கவனம் முழுக்க முழுக்க பரீட்சையை மையப்படுத்தி இருத்தல்
அரசாங்க தொழில்கள், பல்கலைக்கழக அனுமதி, க.பொ.த.உ/நி வகுப்புகளுக்கு அனுமதி என்பவற்றுக்குச் சில கல்வித் தகுதிகள் தேவை. முக்கியமாக இலங்கையில் தொழில் வாய்ப்புகள் அனைத்தும் கல்வித் தகுதிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. எனவே விதிக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் தொடர்புடைய பரீட்சைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.


இதனால் மாணவர்களின் கல்விக் காலம் தம்மை பரீட்சைகளுக்கு ஆயத்தப்படுத்துவதிலேயே கழிகிறது. அதுமாத்திரமின்றி பாடசாலைகளின் சாதனைகள் பரீட்சை பெறுபேறுகளை கொண்டே மதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே இவ்வாறானதொரு நிலைமையானது மாணவர்களையும் ஆசிரியர்களையும் மாத்திரமின்றி முழுக் கல்வி முறையையும் வேறுவகையில் திசை திருப்பி விடுகின்றன.

முழுச்சமூகமும் கல்வித்தகுதிகளை சான்றிதழ்களை மட்டும் விரும்பும் வகையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கற்பதற்கு கற்றல், இணைந்து வாழக் கற்றல் என்னும் உன்னதமான நோக்கங்கள் இதனால் ‘அடிபட்டு‘ போகின்றன என்பது பல கல்வியியலாளர் கருத்து.

பரீட்சை நோக்கு பெற்றுள்ள முக்கியத்துவத்தை இன்று வளர்ச்சி பெற்றுள்ள தனியார் போதனை நிலையங்கள் நன்கு எடுத்துக்காட்டும்.

   05.பாடசாலைகளுக்கு வளங்கள் ஒழுங்காக பகிர்ந்தளிக்கப்படாமை
பாடசாலை வள வேறுபாடு,அல்லது வளப்பகிர்வில் சமநிலையின்மை, நகர்புற பாடசாலைகளுக்கும் கிராமப்புற பாடசாலைகளுக்கும் ஒழுங்கற்ற முறையில் வளங்கள் பகிரப்படுகின்றமை உதாரணமாக மேல் மாகாண பாடசாலைகளையும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளையும் எடுத்து நோக்கும் போது பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தமது அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றுவதற்கு போதிய வசதிகள் இல்லாத நிலை  காணப்படுகிறது.

ஆனால், இதே நேரம் மேல் மாகாண பாடசாலைகளில் நீச்சல் தடாகம், விஞ்ஞான கூடம் என மாணவருக்கு தேவையான அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றது. புதிய பாடசாலை வகைப்படுத்தலும் சமத்துவமின்மையை ஏற்படுத்துகின்றது.

க.பொ.த சாதாரண பரீட்சையில் 6 பாடங்கள் கட்டாயம் சித்தி அடைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால் ஏனைய பாடங்களில் அக்கறை இன்மை.


எனவே வளங்களின் சமனற்ற பகிர்வும் வகைப்படுத்தலும் மிக முக்கியமான பிரச்சினையாக காணப்படுகிறது.#srilankaGK

      06. வறுமை
இன்றைய சூழலை எடுத்து நோக்கும் போது பொருளாதார நெருக்கடியானது மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. பொருட்களின் விலையேற்றம் மக்கள் மத்தியில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வறிய மக்கள் தமது பிள்ளைகளுக்கான கல்வியை பெற்றுக் கொடுப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனால் பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளை இடை நிறுத்துகின்றனர்.

   07. கல்விக்கொள்கையில் கலைத் திட்டங்களில் அடிக்கடி ஏற்படும் மாற்றம்.

இன்றைய கலை திட்டமானது வெறுமனே அறிவை வழங்குதல் என்ற ரீதியில் மாணவர்களுக்கு ஒரு சுமையாகக் காணப்படுகிறது.இதனால் இங்கு மாணவரின் சுய சிந்தனை, சிந்திக்கும் ஆற்றல், சமூக திறன்கள், ஏனைய தடைபட்ட திறன்களை விருத்தி செய்வதில் வெற்றி காணவில்லை.

பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்கள் எதிர்நோக்கும் வாழ்க்கை சவால்கள், பிரச்சினைகளுக்கு காரணம் பொருத்தமற்ற கலை திட்டமாகும். கலை திட்டத்தின் தராதரக் குறைப்பாட்டிற்கான முக்கிய காரணம் உலகளாவிய மற்றும் உள்ளூர் நோக்கில் அறிவில் ஏற்படுகின்ற மாற்றங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் எழுந்தமான போக்கில் அவசர சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமை.

கலை திட்ட சீர்திருத்தம் நிச்சயமாக இடம்பெற வேண்டியவை. எனினும் அதற்கென ஒரு கால வட்டம் உள்ளது. இங்கு அவ்வட்டம் முறையாக பின்பற்றப்படாமல் அநேகமான சந்தர்ப்பங்களில் ஒரு சீர்திருத்தம் இடம்பெற்று, அதனை நடைமுறைப்படுத்தி அதன் வெற்றி தோல்விகளை பலாபலன்களை அறிய முன்பே மற்றொன்று புகுத்தப்படுகின்றமையால் ஆசிரியரும்,மாணவரும் எண்ணிலடங்கா பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.

   08. ஆங்கில மொழி புலமையின்மை
ஆங்கில மொழி என்பது இன்று ஒரு சர்வதேச மொழியாக காணப்படுகிறது.வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு இதன் அவசியம் மிக முக்கியமானதாகும். இலங்கையில் 1956 ஆம் ஆண்டு மொழிச் சட்டத்திற்கு பிறகு ஆங்கில மொழியின் செல்வாக்கு குறைந்து விட்டது. இன்றைய ஆங்கில மொழி பெறுபேறுகளை எடுத்து நோக்கும் போது இது தெட்டத் தெளிவாக புலப்படுகிறது.

    09. மொழி பெயர்ப்புப் பிரச்சினை


பரீட்சை வினாத்தாள்கள்  மொழி மாற்றம் செய்யப்படும் போது பிள்ளைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள்.இது பொதுவாக 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை, க.பொ.த(சா/த) க.பொ.த (உ/த) பரீட்சைகளில் இடம்பெறுகிறது. இதற்கு ஒரு உதாரணமாக 5 ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் நீர் ஒரு வளம் என்பது பற்றி எழுத வேண்டப்பட்டது.

ஆனால் மாணவர்கள் இங்கு நீர் என்பதற்கு 2 அர்த்தம் கொண்டமை பிரதேச மொழி வேறுபாடு அதனை மாணவர் பரீட்சையில் பிரயோகித்தல். போன்றனவும் இப்பிரச்சினைகளுக்குள் அடங்கும்

தகவல் தொடர்பாடல் அறிவின்மை,சவாலுக்கு முகம் கொடுக்கக் கூடிய ஆற்றல் வளர்க்காமை,சர்வதேச நிறுவனங்கள் கல்வியில் ஆதிக்கத்தை செலுத்துதல் (உலக வங்கி),யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்றவற்றின் விளைவு இது போன்ற பல பிரச்சினைகள் இன்றைய கல்வி முறையில் முக்கிய செல்வாக்கினை செலுத்துகிறது என்றால் அது மிகையாகாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad